சிவகங்கை: அதிமுக பிரமுகரை கைது செய்யக்கோரி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தி ஊராட்சி மன்ற செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் தவமணி. இதே ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் அதிமுக கிளை செயலாளராகவும் ராமு பதவி வகித்துள்ளார். 

அவரது பரிந்துரையின் பேரில் நான்கு மாதங்களுக்கு முன்பு விஜயா என்பவர் அலுவலக கணினி ஆபரேட்டராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஊராட்சி ஒன்றியத் தலைவர்களின் பதவிக்காலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், விஜயாவின் பணிச்செயல்களில் குறைகள் காணப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவரது நியமனத்தை ரத்து செய்தார். 

அதன்படி, கடந்த மாதம் 14ஆம் தேதி விஜயா பணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில்,  முன்னாள் தலைவரும் அதிமுக பிரமுகருமான ராமு மற்றும் விஜயா, ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செயலர் தவமணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்தினர். இதில் தவமணிக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, ராமுவை உடனடியாக கைது செய்யக்கோரி முழக்கம் எழுப்பினர். இது தொடர்பாக தவமணி திருப்பாசேத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி