திருப்பாச்சேத்தி மாரநாடு பாலம் அருகே உள்ள கண்மாய் பகுதியில் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததால் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் சிதறின. தகவலறிந்த சிவகங்கை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப்பிரிவு உதவி ஆய்வாளர் திபாகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று ஆய்வு செய்தனர்.
அப்பொழுது, வாகனத்தில் 35 மூட்டைகளில் 1575 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியும், பொலிரோ பிக்-அப் நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனராக பரமக்குடி அருகே சோமநாதபுரம் சிவாஜி காலனியைச் சேர்ந்த சித்தாதித்தன்(44) என்பவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, சோமநாதபுரம், பொதுவக்குடி, திருச்சாத்தனல்லூர், மணி நகர், அண்டக்குடி ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச்சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.