சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தென்னழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் 9-ம் ஆண்டு பால்குடம் மற்றும் இளநீர் காவடி அலங்கு குத்தும் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த வாரம் கட்டுகளுடன் துவங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க ஆற்றங்கரையிலிருந்து ஊர் தலைவர் கரகம் எடுத்தும் பக்தர்கள் பால்குடம், அழகு குத்தி மற்றும் இளநீர் காவடி எடுத்தும் கிராமம் முழுவதும் சுற்றி ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குலதெய்வ குடிமக்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியினை தென்னழகாபுரி கிராம மக்கள் செய்திருந்தனர்.