சிவகங்கை: எம்புரான் திரைப்படத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

தமிழகமெங்கும் "எம்புரான்" திரைப்படத்தை தடை செய்யக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா திரையரங்கில் "எம்புரான்" படம் திரையிடப்பட்டு வந்தது. பூர்வீக வைகை பாசன கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, முல்லைப் பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கங்கள் இணைந்து, திரையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த தகவல் திரையரங்க நிர்வாகத்திற்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, திடீரென "எம்புரான்" படத்திற்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், விவசாயிகள் திரையரங்கம் முன்பு கூடி, "எம்புரான்" திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆதிமூலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம், வைகை பாசன சங்க நிர்வாகி மதுரை வீரன், மாவட்டத் தலைவர் தமராக்கி ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் மாயாண்டி சாமி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி