திருப்புவனம்: சாலையில் சண்டையிடும் காளைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், பாசாங்கரை கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் கோவில் மாடுகள் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிவது, தற்போது பெரும் தொல்லையாக மாறியுள்ளது. பாதுகாப்பின்றி கோவில் காளைகள் நகர் பகுதியில் வலம் வருவது வழக்கமாகியுள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட மாடுகளாக பெருகி, உணவின்றி சாலைகளில் அலைய தொடங்கியுள்ளது. 

இந்த மாடுகள் சாலையில் செல்போர்க்கும், வியாபாரிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சிறு வியாபாரிகளின் சாலையோர கடைகளில் பழம் காய்கறிகளை கூட விட்டு வைப்பதில்லை. அதுமட்டுமின்றி, சில மாடுகள் சாலையின் நடுவே சண்டையிட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றன. வாகனங்களை முட்டி தள்ளிவிடுகின்றன. 

இருசக்கர வாகனங்களை மோதுவதால், இதுவரை பொதுமக்கள் காயம் அடையும் சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலைமையை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் முழுமையாக சாலையில் சுற்றி தெரியும் காளைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளூர்வாசிகளின் கோரிக்கை. 

உணவு தேடி சாலை அலையும் காளைகளை கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில் அடைத்து பராமரிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று திருப்புவனம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு காளைகள் சண்டையிடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி