சிவகங்கை: நகராட்சிக் கடைகளை காலிசெய்ய கூடுதல் அவகாசம் கோரி மனு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மற்றும் பேருந்து நிலைய பகுதியில் உள்ள நகராட்சி குத்தகைக் கடைகளில் கடந்த 35 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், தற்போது கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட கடன் சுமையில் இருந்து மீள முயற்சி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக 22.05.2025 அன்று வழங்கப்பட்ட நோட்டீசில், 30 நாட்களுக்குள் கடைகளை காலிசெய்யும் அறிவுறுத்தல் இடப்பட்டிருந்தது. இந்த நிலையை எதிர்த்து, வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ. பெரியகருப்பன் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தற்போழுது கடை நடத்தி வரும் அனைவருக்கும் அதே இடத்தில் மீண்டும் கடை வழங்கப்பட வேண்டும், கொரோனா காலத்துக்கான ஆறு மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும், கடைகள் ஒப்படைக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும், ஒப்படைக்கும் நேரத்தில் மூன்று மாத வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும். 

இடைக்காலமாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்தில் அனைத்து வியாபாரிகளுக்கும் தற்காலிக கடைகள் அமைத்து வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 30 நாட்கள் கால அவகாசம் போதுமானதல்ல என வலியுறுத்திய வியாபாரிகள், தங்கள் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி