பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் பாதுகாப்பையும் வளர்த்தெடுக்கும் நோக்கில், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி இன்று சிவகங்கை மாவட்டத்தில் துவங்கியது. இந்தப் பயிற்சி நிகழ்ச்சி, சாக்கோட்டை ஒன்றியத்திலுள்ள காரைக்குடி பெரி. நா. சின்னையா அம்பலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் திரு. ஏ. பீட்டர் லெமாயு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சகாய்பிரிட்டோ மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு. செல்வகுமார் ஆகியோர் நேரில் பங்கேற்று, பயிற்சியின் ஆரம்பத்தைக் காணொளியாகவும் நேரடியாகவும் பார்வையிட்டு மாணவிகளை ஊக்குவித்தனர். தற்காப்புக்கலை பயிற்சியாக, கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மாணவிகள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் — கீச்சேன், துணிகட்டி, பேக், பேனா, நோட்புக் போன்றவற்றை வைத்து தற்காப்பு முறைகளும் இந்த பயிற்சியில் கற்றுத்தரப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், 182 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் 132 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், மொத்தமாக 314 பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்புப் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசால் ரூ. 39,60,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.