தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் பங்குத் திருவிழா சப்பர பவனியுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவகங்கை மறை மாவட்ட மேதகு ஆயர் ஆனந்தம் அவர்கள் தலைமை வகித்து திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். ராம்நகர் பங்குத்தந்தை அருள்பணி வின்சென்ட் அமல்ராஜ் முன்னிலை வகித்து ஆயரோடு இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார். இவர்களோடு தேவகோட்டை வட்டார அதிபர் அருள் சந்தியாகு, புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி, ஆரம்ப குருமார்களின் இயக்குநர் அருள்பணி தாமஸ் மற்றும் 25க்கும் மேற்பட்ட குருமார்கள் திருப்பலியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்பு சப்பர பவனியானது ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் இருந்து தொடங்கி ராம்நகர் முதலாவது வீதி, எழுவன்கோட்டை ரோடு, ராம்நகர் மூன்றாவது வீதி வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. இத் தேர்பவனியில் அருள்சகோதரிகள், ராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளை கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராம்நகர் பங்குப் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.