சேலம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜனவரி 16) இரவு 7 மணி அளவில் சேலம் அருகே மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகர் பகுதியில் லாரி ஒன்று சென்றது. அப்போது வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரே நேரத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் ஒரு வாலிபர் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபரின் கால் முறிந்தது. 

தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட வாலிபரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வாழப்பாடி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டம் கனவாஅம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் சின்னதுரை (வயது 24) என்பது தெரிய வந்தது. இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். காணும் பொங்கலை முன்னிட்டு அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற சின்னதுரை தன் நண்பரைப் பார்த்துவிட்டு வருவதாக கூறி மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்ற போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி