கிராம மக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக ஏற்காட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அவர்கள் தினமும் பயன்படுத்தும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு ஏதுவாக இல்லை. இந்த சாலையில் பயணிக்கும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் யூனியன் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அப்படி இருந்தும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே கிராம மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் தாங்களாகவே களத்தில் இறங்கி சாலையை சீரமைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி டிப்பர் லாரி மூலம் மண் அள்ளி வந்து பொக்லைன் எந்திரம் மூலம் குண்டும், குழியுமான இடத்தில் மண்ணை கொட்டி சாலையை சீரமைத்தனர். இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் பாராட்டினர்.