ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் திடீர் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சியளித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று ஏப்ரல் 2) இரவு தொடங்கிய சாரல் மழை இன்று (ஏப்ரல் 3) காலை வரை தொடர்ந்து பெய்தது. 

இந்நிலையில் இன்று ஏப்ரல் 3) காலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏற்காடு மலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் ஏற்காடு மலைப் பாதையில் 7வது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையில் ஓரமாக இருந்த ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. 

இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.

தொடர்புடைய செய்தி