நேற்று (மார்ச் 15) சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு கட்டுமான பணிக்காக ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு ஏற்காடு மலைப்பாதையில் ஈஸ்வரன் லாரியை ஓட்டி வந்தார். லாரி மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது வனவிலங்குகள் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக டிரைவர் ஈஸ்வரன் மினி லாரியை இடதுபுறமாக சாலையின் ஓரத்திற்கு திருப்பினார்.
இதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு சுமார் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டோடியது. பின்னர் அங்கிருந்த மரத்தின் புதரில் சிக்கி ஒருபுறமாக கவிழ்ந்து நின்றது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஈஸ்வரன், பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனிடையே அந்த சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் மினி லாரி விபத்துக்குள்ளானதை கண்டதும் 80 அடி பள்ளத்தில் காயங்களுடன் இருந்த டிரைவர் ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஈஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.