பச்சிளம்குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை முற்றுகை

சேலம் மாவட்ட வாழப்பாடி அருகே சி. என். பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது பெண் சுகந்தி ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில் சுகந்தி கர்ப்பமானதால் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 24 (செப்) செவ்வாய் கிழமை காலை சுமார் 11 மணி அளவில் பிரசவத்திற்காக வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு 26 (செப்) இரவு சுமார் 7. 30 மணிக்கு சுகந்திக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. குழந்தை வெளியே வராததால் ஆயுதத்தை பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தைக்கு கை கால்கள் எந்த அசைவும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த பெற்றோர்கள், உறவினர்கள் 28 (செப்) வாழப்பாடி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார் பெண்ணின் உறவினர்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி