சேலம்: ஆசிரியை திட்டியதாக கூறி தற்கொலைக்கு முயன்ற +2 மாணவர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பள்ளத்தானூர் வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் முத்தையன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 17). இவர் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் ராஜ்குமார் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ஆனால் வீட்டிற்கு செல்லாமல் கூட்டாத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள விவசாய மருந்து விற்பனை கடையில் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி குடித்து மயங்கி விழுந்தார். 

இதையடுத்து ராஜ்குமாரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறும் போது, 'நேற்று பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர் ராஜ்குமாரை ஆசிரியர் ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்' என்றார்கள். ஆசிரியர் திட்டியதாக கூறி பிளஸ்-2 மாணவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி