சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தன் மகன் பன்னீர்செல்வம் (60). இவர் இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இளம்பிள்ளை பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்தார். அப்பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த பன்னீர்செல்வத்திற்கு நேற்று பணி ஓய்வு பெறும் நாளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் இறந்த பன்னீர்செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரது மறைவிற்கு இளம்பிள்ளை பேரூராட்சி தலைவர், துணை தலைவர், செயல் அலுவலர், வார்டு கவுன்சிலர்கள் , அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.