சேலம் மாவட்டம் வீரபாண்டி முன்சீப் தோட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 94). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள் (87). இவர்களுக்கு மதிவாணன், திரவியம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரன், பேத்திகளும், 5 கொள்ளு பேரன் பேத்திகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெகதாம்பாள் வயது முதிர்வு காரணமாக இறந்தார். மனைவி இறந்ததால் சோகம் தாங்காமல் பெரியசாமி மனைவியின் உடல் அருகிலேயே அமர்ந்து இருந்தார். மனைவி இறந்த துக்கத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு பெரியசாமி திடீரென உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரின் உடல்களுக்கும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். மனைவி இறந்து 9 மணி நேரத்தில் கணவனும் இறந்ததால் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.