சங்ககிரி: கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்த.. மகன் கைது

சங்ககிரி அருகே குடும்பத்தகராறில் தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். சங்ககிரி தாலுகா காவேரிப்பட்டி கே மேட்டுப்பாளையம் வெள்ளப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன், இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு சந்தியா என்ற மகள், சந்தோஷ் குமார் என்ற மகன் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு குமாரி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தோஷ் குமாரிடம் தந்தை மணிகண்டன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் கோபம் அடைந்த மகன் தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த மணிகண்டன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி