சேலம்: கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, சேலம் மண்டல கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு எந்த முன்னறிவிப்பும் இன்றி, சிறு கனிம நில வரியை கன மீட்டர் என்று இருந்ததை மெட்ரிக் டன் என மாற்றி பல மடங்கு வரியை உயர்த்தியுள்ளது. 

இதன் காரணமாக, ரூ. 3,500 முதல் ரூ. 4,000 வரை இருந்த ஒரு யூனிட் ஜல்லி ரூ. 5 ஆயிரமாகவும், எம். சாண்ட் யூனிட் ரூ. 5,500 முதல் ரூ. 6,000 வரையும், பி. சாண்ட் யூனிட் ரூ. 7 ஆயிரமாகவும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத நிலை ஏற்படும். மேலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். 

இதன் வேலைநிறுத்தம் காரணமாக, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குவாரிகள் இயங்காது. அரசுக்கு நாள் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். எனவே, உடனடியாக அரசு தலையிட்டு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி