சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் கியாஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நிரப்பப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, திருப்பத்தூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களில் 10 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
மாலை வரை நடந்த இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படி இருந்தும் சமாதானம் ஆகாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் இரவு 9.30 மணி வரை நடந்தது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.