சேலம்: கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; கலெக்டர்

உலக தண்ணீர் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. வீராணம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி பார்வையாளராக கலந்து கொண்டார். 

இதில் ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும் மழைநீர் சேகரித்தல், சிக்கனமாகத் தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களைச் சரிசெய்து தண்ணீரை வீணாகாமல் பாதுகாத்தல், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: - இந்தாண்டு உலக தண்ணீர் தினத்தை 'பனிப்பாறை பாதுகாப்பு' என்கிற சிறப்புக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

குறிப்பாக 2024-25-ம் நிதியாண்டிற்குத் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி' என்ற நிலைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி