சேலம்: நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்கள் பறிமுதல்

சேலம் மாநகரில் சாலை விதிகளை மீறுவோருக்கு ஸ்பாட் ஃபைன் திட்டம் அமலில் இருந்தது. இதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அபராதத்தை விதித்து நீதிமன்றத்தில் செலுத்துமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தினமும் 1000 பேர் மீது மோட்டார் வாகன வழக்குகளை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். சேலம் ஐந்து ரோடு பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் சென்றால் கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகள் புது டெக்னிக்கை பயன்படுத்தி வருகின்றனர். ஐந்து ரோடு பகுதிக்கு அடிக்கடி செல்லும்போது வண்டியின் பின்புறத்தில் இருக்கும் நம்பர் பிளேட்டை கழட்டி விடுகின்றனர். 

இதனால் அபராதம் விதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் கூறுகையில் இது போன்ற மோசடியாக நம்பரை அழித்துவிட்டு செல்வது குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றாலும் அப்பகுதியில் போலீசார் நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நம்பர் பிளேட் இல்லாமல் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி