சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி மற்றும் புறநகரில் ஆத்தூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி ஆகிய 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு தினமும் சராசரியாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் அதிகாலையில் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே முதலில் கடைகள் ஒதுக்கப்படுவதாகவும், அதன்பிறகு தாமதமாக வரும் விவசாயிகளுக்கு கடைகள் கிடைப்பதில்லை. இதனால் தரையில் அமர்ந்து காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அம்மாப்பேட்டை உழவர் சந்தையில் 60 கடைகள் உள்ளன. ஆனால் தினமும் 75 முதல் 80 விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய சந்தைக்கு வருகிறார்கள். இதனால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து தான் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். எனவே, அம்மாப்பேட்டை மட்டுமின்றி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி உழவர் சந்தைகளில் இடவசதி இருந்தால் கூடுதல் கடைகள் கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.