நகை கடைகள் நடத்தி ரூ. 100 கோடி மோசடி வழக்கில் 2 பேர் கைது

சேலம் அருகே வலசையூரை சேர்ந்தவர் சபரிசங்கர் (வயது 40). இவர், அம்மாப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு எஸ். வி. எஸ். ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகைக்கடையை தொடங்கினார். இதனை தொடர்ந்து சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்தூர் ஆகிய இடங்களிலும் நகைக்கடைகளை ஆரம்பித்தார்.

நகை சீட்டு, பழைய நகைக்கு புதுசு, முதலீடுக்கு ரூ. 2. 50 வட்டி என பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார். இதனை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு நகை திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்தனர். இதன்மூலம் வருமானம் அதிகரித்ததால் நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதன் கிளைகள் தொடங்கப்பட்டன. ஆனால் பல்வேறு திட்டங்களில் சேர்ந்த நபர்களுக்கு உரிய முதிர்வு தொகையை சபரிசங்கர் கொடுக்காமல் ஏமாற்றினார்.

சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டதாக அவர் மீது சேலம் மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் நகைக்கடைகளுக்கு முதன்மை அதிகாரியாக செயல்பட்ட ஆட்டையாம்பட்டியை சேர்ந்த முருகன் (38), மார்க்கெட்டிங் மேலாளர் பிரகாஷ் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி