ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு ரெயிலில் சிலர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில்வே போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தியபோது, 4-வது நடை மேடையில் உள்ள நகரும் படிக்கட்டு அருகே சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்த பேக்கை சோதனை நடத்தியதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், அவர் ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் சாந்த் வாலி பகுதியைச் சேர்ந்த பெனுதர் மாலிக் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்த வந்து சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வினியோகம் செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவரிடம் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி