விழாவிற்காக அங்கு 1 லட்சத்து 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மிகப்பிரமாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தொடர்ந்து விழா மேடை அமைத்தல், பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான இருக்கை வசதிகள், பாதுகாப்புப் பணிகள், அணுகு சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். முன்னதாக அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருப்பைக் காட்டிக்கொள்ள எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டம், ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்து வருகிறார். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்றார்.