சேலம் ஏற்காடு உள்பட மேலும் 4 இடங்களில் மினி விளையாட்டு அரங்கம்; சிவரஞ்சன்

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்பட மேலும் 4 இடங்களில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மினி விளையாட்டரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஆத்தூர், தாண்டவராயபுரம் மற்றும் மேட்டூர் சர்கார் தோட்டம் ஆகிய இடங்களில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மினி விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் மாவட்டத்தில் ஏற்காடு, சங்ககிரி, கெங்கவல்லி, தலைவாசல் ஆகிய 4 இடங்களில் மினி விளையாட்டரங்கம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறியதாவது: இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் மாவட்டத்தில் ஏற்கனவே 2 இடங்களில் மினி விளையாட்டரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு ஓடுகளம், கேலரி, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, கோ-கோ, கபடி மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி