சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கு வாலிபர் பலியா?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் சேத்துக்குழி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உயிரிழந்தார். 

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி முதல்வர் தேவி மீனாளிடம் கேட்டபோது, அந்த வாலிபருக்கு கொரோனா மட்டுமின்றி சிறுநீரகம் பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு இணைநோய்கள் இருந்தது. இதன் காரணமாக அவர் உயிரிழந்து விட்டார், என்றார். சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு வாலிபர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி