விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (29. 08. 2024) மாவட் ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இன்றைய தினம் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வருகின்ற 07. 09. 2024 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது சட்டம் ஒழுங்கினைப் பராமரித்திடவும், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகள் நிறுவுவதற்கு மாநகராட்சி பகுதியினைப் பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோர்களிடமும் உரிய அனுமதி பெற்று நிறுவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகள் நீர் நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வண்ணங்களை மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். இரசாயன வர்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.