சேலம் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணி; கலெக்டர் தகவல்

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணி தற்போது தொடங்கி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளித்து கணக்கெடுப்பு பணி நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி