பெண்ணின் கவனத்தை திசைதிருப்பி ரூ. 2. 40 லட்சம் அபேஸ்

சேலம் காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வசந்தா (வயது 58). சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வசந்தா அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். வசந்தா அவரது பி. எப். பணத்தை எடுக்க விண்ணப்பித்திருந்தார். அவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்தது.

சாரதா கல்லூரி சாலையில் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்று வசந்தா ரூ. 500-ஐ எடுத்தார். அப்போது, அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர் எந்திரத்தில் கை வைத்தபடி வசந்தாவை நகரும்படி கூறினார். இதையடுத்து அவர் எந்திரத்தில் இருந்த வசந்தாவின் ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டு டம்மியான ஒரு ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்துள்ளார். அதனை கவனிக்காத வசந்தா அந்த கார்டையும், ரூ. 500 பணத்தையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றார்.

பிறகு சற்று நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து முதலில் ரூ. 2 லட்சமும், அதன்பிறகு ரூ. 40 ஆயிரமும் எடுத்ததற்கான குறுந்தகவல் அவரது செல்போன் எண்ணிற்கு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த நபரின் உருவத்தை வைத்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி