சேலம்: பொங்கல் பண்டிகை ஒட்டி வெல்லம் தயாரிப்பு ஆலையில் அதிரடி சோதனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் வெல்லம் ஆலைகளில் ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஓமலூர், காடையாம்பட்டி, காமலாபுரம், சங்ககிரி, எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த ஆய்வில் இதுவரை 58 ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் இதுவரை வெள்ளை சர்க்கரை 9450 கிலோ கிராம், செயற்கை நிறம் 0.12 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெல்லம் கண்காணிப்பு உணவு மாதிரிகள் 14 மற்றும் சட்ட உணவு மாதிரிகள் 7 எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் கண்டறியப்பட்ட 15 வெல்லம் தயாரிப்பு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறியதாவது: பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து வெல்லம் தயாரிப்பு ஆலைகளிலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி