சேலம்: 41, 456 மாணவ, மாணவிகள் எழுதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதேபோல், 5-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்கப்பட்டு இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதனை தொடர்ந்து எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வுகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 522 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 8 மாணவர்கள், 20 ஆயிரத்து 448 மாணவிகள் என மொத்தம் 41 ஆயிரத்து 456 பேர் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத இடவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 190 முதன்மை கண்காணிப்பாளர்கள், 190 துறை அலுவலர்கள், 230 பறக்கும் படை அலுவலர்கள் உள்பட 3, 500-க்கும் மேற்பட்ட கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வந்து செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி