சேலத்தில் கட்டடத் தொழிலாளி கொலை: மூவருக்கு ஆயுள் தண்டனை

சேலம் மாவட்டம் மூங்கில்பாடி சேனைகவுண்டனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தனது நண்பர்களான ரகுபதி (24), மணிமாறன் (23), தமிழ்ச்செல்வன் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் அவர்கள் சேனைகவுண்டனூர் பகுதியில் உள்ள சுடுகாடு பகுதிக்குச் சென்று 4 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். 

அன்று இரவு மணிகண்டன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இதையடுத்து மறுநாள் அவரது உறவினர்கள் சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மணிமாறன், ரகுபதி, தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் 2வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. கொலை செய்த மணிமாறன், ரகுபதி, தமிழ்செல்வன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழில்வேலவன் தீர்ப்பு கூறினார்.

தொடர்புடைய செய்தி