சேலம்: பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் என்கிற ரமேஷ் அரவிந்த் (வயது 21). இசைக் கலைஞர். கடந்த 2021-ம் ஆண்டு பவானிசாகர் அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவில் மேளம் அடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியுடன் ஹரிஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஹரிஷ் திருமண வாக்குறுதி கூறி, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி மாணவியை பவானிசாகரில் இருந்து ஈரோட்டுக்கு வரவழைத்தார். 

பின்னர் அங்கிருந்து உப்பாரப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு மாணவியை கடத்திச் சென்றார். பின்னர் மறுநாள் அங்கிருந்து பெரியவடகம்பட்டி பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று அங்கு 3 நாட்கள் தங்கவைத்து ஹரிஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

 அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹரிசை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, மகளிர் கோர்ட்டு நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்ததுடன், தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி