ஓமலூர் அடுத்த பல்பாக்கி கிராமத்தில் உள்ள ஓங்காளியம்மன், மகமாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி, ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனர். மாலை 5 மணிக்கு மேல் வண்டி வேடிக்கை, செண்டை மேளம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் பூங்கரகம் மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (வியாழக்கிழமை) மகமாரியம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.