சேலம்-சென்னை இடையே விமான கட்டணம்.. பல மடங்கு உயர்வு

சேலம் விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 4 நகரங்களுக்கு இண்டிகோ, அலையன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சேலம்-சென்னை விமானம் தவிர, மற்றவை உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்படுவதால் குறிப்பிட்ட கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால சேலம்-சென்னை விமானம் மட்டும் வணிக கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விழாக்காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளிடையே ஏற்படும் போட்டிக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகின்றன. அந்த வகையில் சேலம்-சென்னை விமானத்தில் நேற்று பயணம் செய்வதற்கு ஏராளமான பயணிகள் டிக்கெட் எடுத்தனர். அப்போது, வழக்கமான கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, சேலம்-சென்னை விமான கட்டணம் ரூ. 5 ஆயிரத்து 630 ஆகும். ஆனால் நேற்று ஒரு பயணிக்கு கட்டணமாக ரூ. 15 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல், இன்று (திங்கட்கிழமை) சென்னை செல்வதற்கு விமான கட்டணமாக ரூ. 16 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதிநாள் விடுமுறை என்பதால் சேலம்-சென்னை விமான கட்டணம் பல மடங்கு உயர்த்திருப்பது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி