சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அமைச்சர் ராஜேந்திரன் (மத்திய), டி. எம். செல்வகணபதி எம்.பி. (மேற்கு), எஸ். ஆர். சிவலிங்கம் (கிழக்கு) ஆகியோர் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை வரவேற்றனர். அவர்களுடன் அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர். தொடர்ந்து அங்கு பிரமாண்ட 'ரோடு ஷோ'வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சாலையின் இருபுறமும் ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் என ஏராளமானவர்கள் திரண்டு நின்றனர். அவர்களை கண்டதும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி நடந்து செல்ல தொடங்கினார். அவர் நடந்து வந்ததை கண்டு அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை கண்டு கை அசைத்தும், கை குலுக்கியும் மு. க. ஸ்டாலின் நடந்து சென்றார். பெரும்பள்ளத்தில் இருந்து சுமார் ½ மணி நேரம் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.