இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 120 அடியை எட்டி 2-வது முறையாக நிரம்பியது. ஒரு சில வாரங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது. இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 2022-ல் ஒரே ஆண்டு 3 முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.