நங்கவள்ளி அருகே மகனை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள குண்டுதாசனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60), விவசாயி. இவருடைய மகன் வெங்கடாஜலம் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். வெங்கடாஜலம் தனது தந்தை பழனிசாமியுடன் சொத்து கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கம் போல் வெங்கடாஜலம் தனது தந்தையிடம் சொத்து கேட்டு தகராறு செய்து உள்ளார்.

 அப்போது தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி கடப்பாரையால் மகன் வெங்கடாஜலத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த கொலை குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 

இதில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உதயவேலன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குழந்தைவேல் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி