நங்கவள்ளி அருகே குடிசை தீப்பிடித்து முதியவர் பலி

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கே.ஆர். தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). இவருடைய மனைவி காந்திமதி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நங்கவள்ளி அருகே மாமரத்து மேடு பகுதியில் உள்ள மூத்த மகள் சுகன்யா வீட்டில் பெரியசாமி வசித்து வந்தார். நேற்று முன்தினம் (டிசம்பர் 29) இரவு மகளும், அவரது குடும்பத்தினரும் வெளியே சென்றிருந்த நிலையில், பெரியசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் இரவில், மகள் வீட்டின் முன்பகுதியில் உள்ள குடிசையில் தூங்கிக்கொண்டு இருந்தார். 

நேற்று (டிசம்பர் 30) அதிகாலை குடிசையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் நங்கவள்ளி தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. குடிசையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. குடிசையில் இரும்பு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பெரியசாமி உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாகி விட்டார். 

இந்த விபத்து குறித்து நங்கவள்ளி போலீசில் பெரியசாமியின் மனைவி காந்திமதி புகார் செய்தார். அதில் அவர் தனது கணவர் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் பெரியசாமி இறப்பைச் சந்தேக மரணம் என நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி