இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசியதாவது: சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.
குறிப்பாக தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசின் சாதனைத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட வேண்டும். சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2 முறை நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் எதிரணியினர் வெற்றி பெற்றுள்ளனர். இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயம் ஆகும்.
சேலம் மாவட்டம் ஏற்கனவே திமுகவின் கோட்டை என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் 11 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.