சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த கால்நடை சந்தை தமிழகத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கே வீரகனூர், தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி வீரகனூர் கால்நடை சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் செம்மறி ஆடு, தலைச்சேரி ஆடு, நாட்டினம் ஆடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு ஆடு 3,500 முதல் 25,000 வரை விற்பனையானது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதில் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.