சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆணையப்பட்டி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன, அதில் 4வது வார்டுக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்துளை கிணறு அமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. குடிநீர் வினியோகிக்க பயன்படுத்தப்பட்டு வரும் மின் மோட்டார் பழுதானதால் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக மின் மோட்டார் சரிசெய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு அலட்சியமாக இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய அப்பகுதி மக்கள் ஊராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் வேறொரு பகுதிக்குச் செல்லும் குடிநீரை மாற்றி 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீரகனூர் நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீரை பிடித்து எடுத்துச் செல்லும் அவலநிலை உள்ளது. மேலும் 10 நாட்களுக்கும் மேல் பிடிக்கும் தண்ணீரில் புழுக்கள் வைத்து விடுவதால் குடிநீர் பயன்படுத்த முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். பழுதான மின் மோட்டாரை உடனடியாகச் சரிசெய்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.