எடப்பாடி அருகே அரசு பள்ளி மாணவன் மீது திடீர் தாக்குதல்

சேலம் மாவட்டம் எடப்பாடி நைனாம்பட்டியை சேர்ந்தவர் ரசூல்கான். இவருடைய மகன் அப்துல் ரகுமான் (வயது 15). இவன் அங்கு உள்ள அரசு மாதிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவன் அப்துல் ரகுமான் மதிய உணவு இடைவேளையில் உணவருந்தி விட்டு மீண்டும் பள்ளிக்குள் நுழைந்தான். 

அப்போது பள்ளியின் பிரதான வாசல் அருகே மாணவனை தடுத்து நிறுத்திய அடையாளம் தெரியாத 2 பேர், மாணவனின் உறவினர்களான ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வசித்து வரும் இஸ்மாயிலின் மனைவி சபீனா மற்றும் அவரது மகன் ரியாஸ் ஆகியோரை பற்றி விவரம் கேட்டதாகவும், அதற்கு மாணவன் அப்துல் ரகுமான் தனக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளார். இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் மாணவன் அப்துல் ரகுமானை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாணவன் அப்துல் ரகுமான் சம்பவம் குறித்து எடப்பாடி போலீசில் புகார் அளித்தான். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மாணவனை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி