சேலம்: செங்கரும்பு அறுவடை பணி; விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைந்துள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில், விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். 

நல்ல மண் வளமும், நீர் வளமும் நிறைந்த இப்பகுதியில் விளையும் செங்கரும்புகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால், இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. 

மேலும் மொத்த வியாபாரிகளால் இப்பகுதியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் புனே, சூரத், ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. காவிரி பாசனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் செங்கரும்புகள் பயிர் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட பகுதியை சேர்ந்த கூட்டுறவு துறை அலுவலர்கள் இப்பகுதியில் முகாமிட்டு, கரும்பை பெரும் அளவு கொள்முதல் செய்து வருகின்றனர். 

எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 350 முதல் ரூ. 420 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்புக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி