சேலம்: மாணவிகளிடம் சில்மிஷம்... அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி தமிழாசிரியர் செந்தில்குமரவேல். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தமிழ்ப் பாடம் நடத்தி வந்துள்ளார். 

இந்த நிலையில் தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொள்வதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் பொறுமையை இழந்த மாணவிகள் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098-க்கு புகார் தெரிவித்ததின் பேரில் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிந்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது புகார் தெரிவித்த மாணவிகளிடமும், குற்றம்சாட்டப்பட்ட தமிழாசிரியர் செந்தில்குமரவேலிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டபோது மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமரவேலை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி