சேலம் மாவட்டம் மேட்டூர் வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி, இவர் தனது மூன்று குழந்தைகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து மாலதி கூறியதாவது: எங்கள் வீட்டிற்கு அருகே எனது கணவரின் தங்கை மற்றும் மாமியார் குடியிருந்து வருகின்றனர். எனது கணவரின் தங்கை வீட்டுக்கு வந்து செல்லும் சிலர் எனது வீட்டிற்கும் வந்து கதவை தட்டி தொல்லை கொடுக்கின்றனர். இது குறித்து எனது கணவர் தட்டி கேட்டபோது அவரை அடித்து வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் சேதப்படுத்தினர். இது குறித்து நங்கவள்ளி போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள வந்தேன். என கூறினார்.