சேலம்: டாரஸ் லாரி டூவீலர் மீது மோதி விபத்து; 2 பேர் பலி

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் சித்தூர் கிராமம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவா (வயது 35), சேகர் (50). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். கூலித்தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நேற்று சொந்த வேலையாக எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கிச் சென்றனர். எடப்பாடி-சங்ககிரி பிரதான சாலையில் அரசு கலைக் கல்லூரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி அதிவேகமாக வந்த டாரஸ் லாரியின் முன்புறத் தயர் திடீரென வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி சாலையின் எதிர்த் திசையில் சிவா, சேகர் வந்த இருசக்கர வாகனத்தை மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துத் துடித்து உயிரிழந்தார். அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிப் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காகச் சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய டாரஸ் லாரியின் டிரைவர் தப்பி ஓடிய நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி