ஆத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல், சின்னசேலத்தில் பால் எடுத்துச் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாமக-வின் பசுமை தாயக மாநில தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது. 

அப்போது சௌமியா அன்புமணி உள்ளிட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை கண்டித்தும் தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரே சேலம் கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் உள்ளிட்டவர்களை ஆத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் அழகுராணி, போலீசார் வாகனத்தில் ஏற்றியபோது அங்கு இருந்த மற்ற நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிலரை மட்டும் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என போலீசார் வாகனத்தை சிறைபிடித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இரண்டு மினி பேருந்துகளில் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி