ராமநாதபுரம்: திருவிழாவை முன்னிட்டு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. இக்கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 சிவ ஸ்தலங்களில் 8வது ஸ்தலமாக விளங்குகிறது. 

அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கு வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு சினேகவல்லி அம்மன் சமேத அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்தடைந்தனர். 

இரண்டு தேர்களில் பெரிய தேரில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடனும், சின்ன தேரில் சினேகவல்லி அம்மன் வீற்றிருந்தனர். இரண்டு தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து திருவாடானை நான்கு தெருக்கள் வழியாக வந்து இரண்டு தேர்களில் வீதி உலா வந்தனர்

தொடர்புடைய செய்தி